கிசான் சம்மான் திட்டம் கோடிக்கணக்கில் பணம் சுருட்டல்... எப்படி நடந்தது முறைகேடு?

 தமிழகத்தில், பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் 90,000, கடலூரில் 76,000, வேலூரில் 20,000, மதுரையில் 11,000, திருப்பத்தூரில் 9,000, ராணிப்பேட்டையில் 6,000 எனத் தமிழகம் முழுவதும் போலி வங்கிக் கணக்குகளில் கிசான் சம்மான் திட்டத்தில் பயனாளர்களை இணைத்து மோசடி நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை ஐந்து பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்திருக்கிறார்கள். பிரதமர் அலுவலகம் உன்னிப்பாக கவனிப்பதால், விசாரணை சூடுபிடித்திருக்கிறது.




அழுத்தம் கொடுத்த அரசியல்

சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் வகையில், பிப்ரவரி 24, 2019-ல் `பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். `இந்தத் திட்டத்தின்கீழ் வரும் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு 2,000 ரூபாய் வீதம், வருடத்துக்கு 6,000 ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்’ என மோடி அரசு அறிவித்தது. அந்தச் சமயத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியதால், இந்தத் திட்டம் விவசாயிகள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. 


மோடி அரசின் வியூகத்தை உடைப்பதற்காக, `காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு மாதம் 6,000 ரூபாய் வீதம் வருடத்துக்கு 72,000 ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்’ என்று ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். அப்போதே, இந்தத் திட்டம் அரசியல் வடிவம் எடுத்துவிட்டது. ஆண்டுதோறும் ஏறத்தாழ 90,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 14.5 கோடி விவசாயிகள் நேரடியாகப் பயனடையும் திட்டம் என்பதால், ஒவ்வொரு மாநிலத்திலும் திட்டம் செயலாகும்விதத்தை பிரதமர் அலுவலகமும் உன்னிப்பாகக் கண்காணிக்க ஆரம்பித்தது.


`கிசான் சம்மான்’ திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் விவசாய நிலத்துக்கான கணினி பட்டா/சிட்டா சான்றிதழ், வங்கிக் கணக்கு அட்டையின் நகல், ஆதார் அடையாள அட்டை நகல் உள்ளிட்டவற்றை இணைத்து, அந்தந்த பகுதி வி.ஏ.ஓ-க்களிடம் விண்ணப்பம் அளித்துவந்தனர். இந்தப் பட்டா சான்றிதழ்களைச் சரிபார்த்து, விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டிய பொறுப்பு வி.ஏ.ஓ-க்களுக்கு இருந்தது. இந்தத் திட்டத்தை `வருவாய் நிர்வாக ஆணையர்’ மேற்பார்வை செய்துவந்தார். இதில், விவசாயிகளிடம் `கிசான் சம்மான்’ திட்டத்தின் பயனை விளம்பரம் செய்ய வேண்டிய பொறுப்பு மட்டும் வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.


ஏற்கெனவே பணிச்சுமையால் தள்ளாடிய வி.ஏ.ஓ-க்கள், இந்த பட்டா சரிபார்ப்பு பணியையும் கூடுதலாகச் சுமக்க முடியாமல் திணறினர். இதனால், தினசரி `கிசான் சம்மான்’ விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டிய பணி தொய்வானது. `தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், அதற்குள் அதிக விவசாயிகளைப் பயனாளர்களாக இணைக்க வேண்டும். `கிசான் சம்மான் திட்டத்தை தேர்தல் பிரசார ஆயுதமாக மாற்ற வேண்டும்’ என்ற ஐடியாவில் இருந்த மத்திய அரசு, வி.ஏ.ஓ-க்களின் தாமதத்தால் கடுப்பானதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசை சமாதானப்படுத்துவதற்காக, பட்டா சரிபார்ப்பு பணியை ஏப்ரல் மாதம் வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் தமிழக அரசு ஒப்படைத்தாகக் கூறுகிறார்கள். இதிலிருந்துதான் பிரச்னை ஆரம்பித்திருக்கிறது.


எப்படி நடந்தது முறைகேடு?

வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு தினமும் இவ்வளவு பயனாளர்களை `கிசான் சம்மான்’ திட்டத்தின்கீழ் இணைக்க வேண்டும் என்று `டார்கெட்’ கொடுக்கப்பட்டிருக்கிறது. ஊராட்சி ஒன்றிய அளவில் உதவி இயக்குநர்களுக்கும், மாவட்ட அளவில் இணை இயக்குநர்களுக்கும் பயனாளர்களை இணைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகளும் `டார்க்கெட்’டை அடைய முடியாமல் திணறிய நிலையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் உயரதிகாரி மட்டும் அதிகப்படியான பயனாளர்களை இந்தத் திட்டத்தில் இணைத்து ஆச்சர்யமூட்டியிருக்கிறார். அமெரிக்க அதிபர் ஒருவரின் பெயரைக்கொண்ட அந்த உயரதிகாரியால்தான் இவ்வளவு பெரிய முறைகேடு ஆரம்பித்தது என்கிறது வேளாண்மைத்துறை வட்டாரம்.


அதாவது, `டார்க்கெட்’டை அடைவதற்காக தன்னுடைய பயனர் பெயர், கடவுச்சீட்டை சில பிரவுஸிங் சென்டர்களுக்கு அந்த உயரதிகாரி கொடுத்திருக்கிறார். பிரவுஸிங் சென்டரில் இருப்பவர்கள், தங்கள் உறவினர்கள், தெரிந்தவர்கள் எனப் பலரையும் `கிசான் சம்மான்’ திட்டத்தில் உயரதிகாரியின் கடவுச்சீட்டை வைத்து இணைத்திருக்கிறார்கள். வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தவரை பட்டா சரிபார்ப்பு பணி நடந்த நிலையில், `டார்க்கெட்’டைப் பிடிப்பதற்காக பட்டா சரிபார்ப்பதை யாரும் மேற்கொள்ளவில்லை. ஒவ்வொரு பயனாளருக்கும் வருடத்துக்கு 6,000 ரூபாய் வருமானம் கிடைக்கும் என்பதால், இந்தத் திட்டத்தில் முறைகேடாக இணைப்பதற்கு தலா 1,000 ரூபாய் வசூல் நடந்ததாகக் கூறப்படுகிறது. இப்படி மட்டுமே ஒரு கோடி ரூபாயை விழுப்புரத்தில் மட்டும் சுருட்டிவிட்டார்களாம். இதில், அந்த அமெரிக்க அதிபர் பெயர்கொண்ட அதிகாரிக்கும் கமிஷன் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.


இந்த வசூல் வேட்டையை லேட்டாகப் புரிந்துகொண்ட மற்ற மாவட்ட வேளாண் உயரதிகாரிகள், தங்கள் மாவட்டத்திலும் இந்த `வழிமுறை’யை அமல்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். விடுமுறையிலிருந்த கல்லூரி மாணவர்களை வைத்து, ஒவ்வொரு ஊரிலுமுள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்களை `கிசான் சம்மான்’ திட்டத்தில் இணைத்திருக்கிறார்கள். எந்த இடத்திலும் பட்டா/சிட்டா சரிபார்ப்பு பணி நடக்கவில்லை என்கிறார்கள். பெயருக்கு ஏதாவது ஒரு பட்டாவை பதிவேற்றிவிட்டு ஆதார் எண், வங்கிக் கணக்கு விபரங்களை அளித்திருக்கிறார்கள். முதல் தவணையாக மத்திய அரசு இரண்டாயிரம் ரூபாய் அளித்தபோது, இப்படி முறைகேடாக `கிசான் சம்மான்’ திட்டத்தில் இணைந்த அனைவருக்கும் பணம் கிடைத்திருக்கிறது. எந்தப் பிரச்னையும் எழவில்லை. இதனால், குளிர்விட்டுப்போன சில அதிகாரிகள், தங்களது பயனர் பெயர், கடவுச்சீட்டை வைத்து மேலும் பல மோசடிப் பயனாளர்களை இந்தத் திட்டத்தின்கீழ் இணைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.





முறைகேடு எப்படி வெளிச்சமானது?

கடலூர் மாவட்டத்தில், `கிசான் சம்மான்’ திட்டத்தில் இணைந்த 50 போலி பயனாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் பணம் வந்திருக்கிறது. இவர்களை இந்தத் திட்டத்தில் இணைத்த சில பிரவுஸிங் சென்டர் பார்ட்டிகள், `எங்கள் பங்காக ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்’ என்று அந்த போலி பயனாளர்களிடம் சண்டையிட்டிருக்கிறார்கள். இந்த களேபரத்தில் விவகாரம் வெளியே கசிய ஆரம்பித்திருக்கிறது. அந்த மாவட்டத்திலுள்ள விவசாய சங்கங்கள் போராட்டத்தில் இறங்கவும், முறைகேடு வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.


ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான போலிப் பயனாளர்களைப் பதிவேற்றம் செய்து, விவசாயிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மோசடி செய்து பெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது. விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மட்டும் 90,000 போலி பயனாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. கடலூரில் 76,000 போலிப் பயனாளர்கள் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். 13 மாவட்டங்களில் மோசடி நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக வேளாண்மைத்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உறுதிப்படுத்தியிருக்கிறார். முறைகேடு தொடர்பாக விசாரிக்க வேளாண்மைத்துறை சார்பில் பத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோண்டத் தோண்ட போலிப் பயனாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் குவிவதால், இந்த விவகாரம் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதுவரை ஐந்து பேரைக் கைது செய்திருக்கிறது சி.பி.சி.ஐ.டி.


தப்பும் குற்றவாளிகள்

`இந்த விவகாரத்தில் இன்னும் உண்மையான குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி நெருங்கவில்லை’ என்று வேளாண்மைத்துறையைச் சேர்ந்த நேர்மையான அதிகாரிகள் குமுறுகிறார்கள். ஒரு வங்கியின் பணப் பெட்டகச் சாவி வங்கி மேனேஜரிடம் மட்டும்தான் இருக்க வேண்டும். சாவியை வங்கி ப்யூனிடம் கொடுத்துவிட்டு, பணம் கொள்ளை போய்விட்டால், அதற்கு ப்யூன்தான் காரணம் என மேனேஜர் கூற முடியுமா? இந்த அபத்தத்தைத்தான் வேளாண்மைத்துறை அதிகாரிகள் செய்து கொண்டிருக்கின்றனர்.

இடைத்தரகர்களாக செயல்பட்ட பிரவுஸிங் சென்டர் பார்ட்டிகள், ஏஜென்ட்டுகளிடம் இணை இயக்குநர், உதவி இயக்குநர்களின் கடவுச்சீட்டு’போனது எப்படி... இதற்காக எவ்வளவு தொகை கைமாறியது... கடந்த ஜூலை மாதம் மட்டும் ஏறத்தாழ 60,000 போலிப் பயனாளர்களை, துறையின் மேல் பொறுப்பில் இருப்பவரின் பயனர் பெயர், கடவுச்சீட்டை வைத்து `கிசான் சம்மான்’ திட்டத்தில் இணைத்ததாகக் கூறப்படுகிறதே, இந்தத் தகவல் உண்மையா... என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. `டார்கெட்’டை அடைவதற்காக முதலில் தொடங்கிய இந்த முறைகேடு, பிற்பாடு பெரிய வியாபாரமாக மாறிவிட்டது. ‘அட்வான்ஸ் டெக்னாலஜி மேனேஜ்மென்ட் ஏஜென்சி’ என்ற திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களைத்தான் இந்த மோசடியில் பங்குபெற வைத்திருக்கிறது இடைத்தரகர்கள் - அதிகாரிகள் கூட்டணி. இப்போது மாட்டிக்கொண்ட பிறகு இவர்களை சஸ்பெண்ட் செய்வதும், கைது செய்ய முற்படுவதுமாக நாடகம் அரங்கேறுகிறது. உயரதிகாரிகளின் `கடவுச்சீட்டு’ எப்படி வெளியே போனது என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை.


`கிசான் சம்மான்’ திட்டம் பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்பதால், இதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி டெல்லியிலிருந்து கடும் பிரஷர் தரப்படுகிறதாம். ``இதுவரை 80 பேரை சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். 32 கோடி ரூபாயை மீட்டிருக்கிறோம். மோசடியில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது” என்று சூளுரைக்கிறார் வேளாண்மைத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி. `யார் தப்ப முயன்றாலும், மத்திய அரசின் கழுகுப் பார்வையிலிருந்து தப்ப முடியாது’ என்கிறது டெல்லி வட்டாரம். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ நுழைந்தாலும் நுழையலாம்.


Source: Vikatan

No comments:

Powered by Blogger.