ஆடு, கோழி, மீன், இறால்... தரமான இறைச்சியைக் கண்டுபிடிப்பது எப்படி?

 `உணவு` என்ற மூன்றெழுத்து வார்த்தைக்காக ஒவ்வொரு மனிதனும் ஓடிக்கொண்டிருக்கிறான். அதற்காகத்தான் எத்தனை எத்தனை போராட்டங்கள். மனிதன் உள்பட ஒவ்வோர் உயிரினமும் உயிர்வாழ உணவு அவசியம். ஆனால், இன்றைய காலகட்டத்தில், நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானதா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. 


அதிலும் சைவப் பிரியர்களைவிட அசைவப்பிரியர்கள் மத்தியில் இந்தக் கேள்விகள் அதிகம் என ஆய்வு சொல்கிறது. நாம் உண்ணும் இறைச்சி உடலுக்குப் பாதுகாப்பானதா... அவை தரமானதா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழக்கூடிய ஒன்று. இறைச்சி வாங்கும்போது நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும், உணவுக்கூடங்களில் செய்யவேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை விவரிக்கிறார் உணவுப் பாதுகாப்பு வல்லுநர் பசுபதி.

உணவைப் பொறுத்தமட்டில் மொத்தம் 9 உணவுச் சட்டங்கள் உள்ளன. இதில் உணவின் தரம், பாதுகாப்பு என அனைத்தும் அடங்கும். இதில்


இறைச்சி தொடர்பானவை நான்காவது இடத்தில் உள்ளன. இன்றைய காலக்கட்டத்தில் எந்த ஓர் உணவும் 100 சதவிகிதம் சுத்தமானதோ, பாதுகாப்பானதோ இல்லை. ஆனால், நாம் நம்மால் முடிந்த அளவுக்கு அதனை சுத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமைத்துக்கொள்ள முடியும். இறைச்சியைப் பொறுத்தவரை, மக்களுக்கு அவ்வளவாக விழிப்புஉணர்வு இல்லை என்பதே உண்மை. முதலில் இறைச்சி எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைப் பார்ப்போம்.


வெட்டப்படாத முழு இறைச்சியைச் சாதாரண வெப்பநிலையில் 2 மணி நேரம் வரை வைத்திருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. குளிரூட்டப்பட்ட இடத்தில் (0 - 5 டிகிரி) இருந்தால் ஒருநாள் வைத்திருக்கலாம். அதனை குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்தவில்லையெனில், மிகவும் குளிரூட்டப்பட்ட இடத்தில் (-18 முதல் -20 டிகிரி) பாதுகாக்க வேண்டும். அதிலிருந்து வெளியே எடுத்தவுடனேயே சமைக்கக் கூடாது. 


மிகவும் குளிரூட்டப்பட்ட இடத்தில் இருந்து குளிரூட்டப்பட்ட இடத்தில் சில மணி நேரம் பாதுகாக்கப்பட்டு பிறகு பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஓடும் நீரில் நன்றாகக் கழுவிவிட்டு பிறகு பயன்படுத்த வேண்டும். இறைச்சி குளிர்ந்து இருப்பதால் பலர் அதனை வெந்நீரில் சுத்தம் செய்கின்றனர். அது மிகவும் தவறு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இறைச்சி குளிர்ந்து இருந்தால், அது பழைய இறைச்சி என்று நினைக்கிறார்கள். ஆனால், அதுவே பாதுகாக்கப்பட்ட இறைச்சி.



நல்ல கோழி இறைச்சியை எப்படி அறிவது?


இறைச்சியை நசுக்கிப் பார்த்தால் அதிலிருந்து தண்ணீர்வரக் கூடாது. காரணம், நிறைய இடங்களில் எடைக்காகத்  தண்ணீரை சேர்க்கிறார்கள்.


இறைச்சி சிவந்த நிறத்தில் இருக்க வேண்டும்.


நன்றாக அழுத்திப் பார்த்தால், உள்ளே அமுங்கி சிக்கன் உடையக் கூடாது.


மேற்புறங்களில் பச்சை நிறப் படிவங்கள் இருக்கக் கூடாது.



ஆட்டு இறைச்சி கண்டறிவது எப்படி?


இறைச்சி பழையதாக இருந்தால் அழுத்தித் தொடும்போது உடையும். 


சிவந்த நிறத்தில் இருக்க வேண்டும்.


பழுப்பு நிறத்தில் இருந்தால் அது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர வேண்டும்.


இறைச்சியில் அதிக வழுவழுப்புத் தன்மை இருந்தாலும் அது பாதுகாப்பானது அல்ல.



மீன் உணவு எவ்வாறு கணிப்பது?


மீன் கண்ணில் வெளிச்சம் அடித்துப் பார்த்தால், எதிரே பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே பாதுகாப்பான மீன்.


செவுள்களில் சிவந்த நிறம் இருக்க வேன்டும். நீல நிறத்திலோ பழுப்பு நிறத்திலோ இருந்தால், அது உணவுக்கு ஏற்ற மீன் உணவு அல்ல.


வயிற்றுப் பகுதியிலோ துடுப்புப் பகுதியிலோ காயங்கள் இருந்தால், அதனைப் பயன்படுத்துவது நல்லதல்ல. எப்போதும் குளிரூட்டப்பட்ட இடத்தில் பாதுகாக்கப்பட வேண்டும்.



இறால்மீன் உணவு எப்படிக் கண்டறிவது ?


இறாலில் குடற்பகுதி அகற்றி இருக்க வேண்டும்.


தலைப் பகுதியில் மஞ்சள் நிற பொட்டுக்கள் இருந்தால், அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.


வழுவழுப்புத் தன்மை இருக்கக் கூடாது.



இறைச்சிக் கூடங்களில் பின்பற்றவேண்டியவை


பெரிய இறைச்சிக் கூடங்களில் இறைச்சி பேக் செய்து இருக்கும்பட்சத்தில் பேக் செய்த தேதி, பேக் செய்த நாள்களில் இருந்து எத்தனை நாளில் பயன்படுத்த வேண்டும் என்ற விவரத்தைக் குறிக்க வேண்டும்.


சுகாதாரப் பரிசோதனைகளுக்கு உட்பட்டு இருப்பதை வலியுறுத்தும் வகையில் சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும்.


இறைச்சிக் கூடங்களில் பூச்சி போன்ற சிறு உயிரினக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் வைத்திருக்க வேண்டும்.


ஒவ்வோர் இறைச்சிக்கும் வெவ்வேறு வெட்டுப் பலகைகளைப் பயன்படுத்த வேண்டும்.


இறைச்சியை வெட்டப் பயன்படுத்தப்படும் உபகரணத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள தேவையானப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். 


கிராமங்களில் இருக்கும் இறைச்சிக் கூடங்களில் வெவ்வேறு இறைச்சிகளுக்கு வெவ்வேறு வெட்டுப்பலகை பயன்படுத்த முடியாத பட்சத்தில் உப்பினைக் கொண்டு நன்றாக ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்தல் நல்லது.


தயாரிக்கும் முறை


கோழி இறைச்சிக்குத் தயாராவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்பே தீவனம் கொடுப்பதை நிறுத்தி, வெறும் தண்ணீர் மட்டுமே கொடுக்க வேண்டும். இதனால் கோழிகளின் உள்உறுப்புகளில் காணப்படும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.


மேலும் விற்பனைக்காக வெட்டப்படவேண்டிய கோழிகளின் கால்களைக் கட்டித் தொங்கவிட்டு தலையில் லேசாக அடித்தோ வேறு வழிகளிலோ உணர்விழக்கச் செய்ய வேண்டும். அதன்பிறகு கழுத்துப் பகுதியில் உள்ள ரத்தக்குழாயை அறுத்து ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். இறகுகளை நீக்கி, தலையைத் துண்டித்து, தேவையற்ற உள்ளுறுப்புகளை அகற்ற வேண்டும். 


உடல்பாகங்களைக் கழுவி குளிரூட்டப்பட்ட அறைகளில் சேமித்துவைத்து நுண்ணுயிர்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும். பிறகு தேவைக்கேற்ப இறைச்சியின் வெவ்வேறு பகுதிகளைத் துண்டாக்கி, பாலித்தீன் பைகளில் தயார் செய்த நிறுவனத்தின் பெயர், கோழி இறைச்சியின் பகுதி மற்றும் தயாரிக்கப்பட்ட நாள், காலாவதி தேதி, எடை ஆகியவற்றைக் குறிப்பிட்டு தனித்தனியாக வைத்திருக்க வேண்டும்.


இப்படியிருக்க கடந்த மே மாதம் கோழிப்பண்ணைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்த கறிக்கோழி இறைச்சியைத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விற்பனை செய்வதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலகத்துக்குப் புகார் சென்றது. இதையடுத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து ரோட்டோரக்கடைகளில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த சுமார் 100 கிலோ இறைச்சியைப் பறிமுதல் செய்தனர். ஆகவே உணவு விஷயத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


இதேபோல் கடந்த மே மாத கடைசியில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அல்லிக்குளம் பகுதியில் சுகாதாரமற்ற உணவுப்பொருள்கள் மற்றும் இறைச்சிகள் விற்கப்படுவதாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், அங்குள்ள கடைகளில் தரமற்ற எண்ணெய் மற்றும் மசாலாக்கள் கலந்து ஆடு, கோழி, மீன் மற்றும் மாட்டிறைச்சி விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கெட்டுப்போன இறைச்சியும் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது சுமார் 500 கிலோ அளவில் தரமற்ற மற்றும் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Source: Vikatan

No comments:

Powered by Blogger.