வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்களா... உங்களுக்குத்தான் இந்த ஆப்ஸ்!

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றன. இதனால் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணி செய்யத் தங்களை மனதளவில் தயார்ப்படுத்திக்கொண்டு வருகின்றனர்.


வீட்டிலிருந்து பணி செய்வது என்பது அலுவலகத்தில் பணி செய்யும் சூழலுக்கு நேரெதிரானது. இவ்வாறு பணி செய்யும் போது சக பணியாளர்களைத் தொடர்பு கொள்ள சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது பணி நேரத்தை வீணடிக்கலாம், கவனச்சிதறலை அதிகரிக்கலாம். இத்தகைய சூழலில் சக பணியாளர்களைத் தொடர்பு கொள்ளவும், அவர்களுடன் ஆவணங்களைப் பரிமாறிக் கொள்ளவும் உபயோகமாக இருக்கும் சில ஆப்களை பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.


கூகுள் ஹேங்க்அவுட்ஸ் சாட்(Google Hangouts Chat)

கூகுளின் ஹேங்க்அவுட்ஸ் சாட் மூலம் குழுக்கள் அமைத்து அனைவரும் ஒரு தொடர்புடன் வேலை பார்க்கலாம். தனிநபர் தொடர்பு முதல் குழுவாக இணைந்து உரையாடுவது வரை அனைத்தையும் கூகுள் ஹாங்க்ஹவுட்ஸில் செய்ய முடியும். இதில் இருக்கும் 'விர்ச்சுவல் ரூம்' என்கிற வசதி மூலம் ப்ராஜெக்ட்களைக் கண்காணிக்கவும் முடியும். இந்தச் செயலி 28 மொழிகளில் வருகிறது. மேலும் ஒவ்வொரு ரூமிலும் 8,000 பணியாளர்கள் வரை சேர்க்க முடியும்.




ட்ரூப் மெசேஞ்சர்(Troop Messenger )

ட்ரூப் மெசேஞ்சர் ஆப் மூலம் அலுவலக தகவல்களைப் பாதுகாப்பாகப் பரிமாறிக்கொள்ள முடியும். தகவல் பாதுகாப்பு, அறிவுசார் சொத்து உரிமை (intellectual property rights) போன்ற விஷயங்களில் சிறந்து விளங்குகிறது ட்ரூப். இதிலும் தகவல்கள் பரிமாறுதல், வீடியோ கான்ஃபரன்ஸிங், ஆவணங்களைப் பகிர்தல், டெக்ஸ்டாப் ஷேரிங் போன்ற வசதிகள் இருக்கின்றன.




ஸ்லாக் (Slack)

ஸ்லாக் செயலி மூலம் பணியாளர்களையும் தரவுகளையும் வேலைக்குத் தேவைப்படும் கருவிகளையும் ஒரே நேரத்தில் இணைக்க முடியும். இதன் மூலம் பணியாளர்கள் பகிரும் தகவல்கள் எல்லாவற்றையும் ஒரு களஞ்சியமாக வைத்திருக்க முடியும். பின்னர் தேவைக்கேற்ப இதைத் தேடிப் பார்க்கவும் முடியும். இதில் மெசேஜ்கள், தகவல்கள், காணொலிகள், கோப்புகள் ஆகியவையும் அடங்கும். இந்த ஸ்லாக் செயலியை ட்ராப் பாக்ஸ், கூகுள் ட்ரைவ் மற்றும் ஹேங்க்அவுட்ஸ், கிட்ஹப், ட்விட்டர் ஆகியவற்றோடு இணைக்க முடியும்.




வ்ரைக் (Wrike)

வ்ரைக், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் ஒரு இடத்திலேயே நிறுவனங்களின் ஊழியர்களைக் கண்காணிப்பதற்கான அனைத்து வசதிகளும் இருக்கும். ஒரே நேரத்தில் பல்வேறு ப்ராஜெக்ட்களை இதன்மூலம் கண்காணிக்க முடியும்.




ராக்கெட் பாட்ஸ் (Rocketbots)

இது போன்ற நேரங்களில் வாடிக்கையாளர்கள் சேவையைத் தருவதுதான் கடினமான ஒன்றாக இருக்கும். இதற்கு ராக்கெட் பாட்ஸைப் பயன்படுத்தலாம். பல இடங்களிலிருந்து வரும் வாடிக்கையாளர் தொடர்புகளை ஒரே இடத்தில் தொகுத்துக் கொடுக்கும் ராக்கெட் பாட்ஸ். வாடிக்கையாளர்கள் உங்களை அழைத்தால் உடனடியாக உங்களுக்குத் தகவல் வந்துவிடும். இதைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் வேலைகளைப் பிரித்து வீட்டிலிருந்தே வாடிக்கையாளர் சேவையை வழங்கலாம்.




ஜும் (zoom)

ஜூம் ஆப், இணையம் சார்ந்த வீடியோ கான்ஃபரன்ஸிங்க் செயலியாகும். இதன் மூலம் பணியாளர்கள் வீடியோ அழைப்பிலோ அல்லது வாய்ஸ் மூலமோ தொடர்பு கொள்ள முடியும். மேலும் இதில் நடக்கும் வீடியோ மீட்டிங்களை ரெக்கார்டு செய்து கொள்ளலாம். ஒரு பணியாளர் தனது ஸ்கிரினை மற்றொரு பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இந்தச் செயலியில் இலவசமாக 40 நிமிடங்கள் வரை உங்களால் வீடியோ மீட்டிங் நடத்த முடியும்.




மைக்ரோசாப்ட் டீம்ஸ் (Microsoft teams)



இந்தச் செயலி மூலம் ஆவணங்களைப் பரிமாறிக்கொள்ளுதல், ஊழியர்களோடு உரையாடுதல், வீடியோ கால் போன்றவற்றைச் செய்ய முடியும். இதற்கு மைக்ரோசாப்ட் 365-க்கு நீங்கள் பணம் செலுத்தியிருக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் பலவும் இந்தச் செயலியைத் தங்களது அலுவலகத்தில் பயன்படுத்தி வருகின்றனர். வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் இந்த ஆப்.



நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தப்போகும் செயலியைப் பணியாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிப்பதால் அவர்களால் தங்களை அதற்கேற்ப தயார்ப்படுத்திக்கொள்ள முடியும். இதன் மூலம் வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது சுலபமானதாகவும் சிறப்பாகவும் இருக்கும். இந்த நேரத்தில் உடல்நலம் பேணுவது மிகவும் முக்கியம். அதற்காக வேலையில் கோட்டைவிட்டுவிடாதீர்கள்!

 

Source: Vikatan

Tags: technology | gadgets | apps | Coronavirus | Work From Home



No comments:

Powered by Blogger.