தினகரன் தலையங்கம்(25-11-2020) - திருந்துவது எப்போது?

 


இன்றைய சூழலில், தண்ணீருக்கு அடுத்தபடியாக உள்ள மிகப்பெரிய பிரச்னை “மணல் மாபியா’’ என்று கூறப்படும் மணல் கொள்ளை. குறிப்பாக, ஆற்று மணல். ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் பல கோடி ரூபாய் அளவுக்கு, சட்டத்துக்கு  புறம்பாக சுரண்டப்படுகிறது. ஆற்று மணலை சுரண்டுவதால் ஆறுகளின் சூழ்நிலை மண்டலம் பாதிப்படைகிறது. 



நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஒரு கியூபிக் மீட்டர் மணலை எடுத்தால், மூன்று கியூபிக் மீட்டர் தண்ணீரை இழக்க நேரிடுகிறது. மணலில் காணப்படும் நுண்ணுயிரிகள், மண்ணுக்கு செழிப்புத்தன்மையை கொடுக்கின்றன. ஆற்றுமணல் அதிகப்படியாக அள்ளப்படுவதால், இத்தகைய நுண்ணுயிரிகள் அழிந்துவிடுகிறது.


முன்பெல்லாம் நாம் ஆற்று ஓரங்களில் கையை வைத்து தோண்டினாலே தண்ணீர் வரும். ஆனால், இன்று 100 அடிக்கு மேல் தோண்டினாலும் தண்ணீர் வருவது இல்லை. ஏனென்றால், நாம் ஆற்று மணலை அதிகமாக சுரண்டி விட்டதால், நிலத்தடி நீரை சேமிக்க முடியாமல் போகிறது. மேலும், ஆறுகளில் நீர்வரத்து குறைந்து, அதன் சூழ்நிலை மண்டலம் இன்று பாலைவனமாக மாறி வருகிறது. இதனால், அங்கு வாழும் தாவரம், விலங்கினங்கள் அழிந்து வருகின்றன.


ஆற்றுப்படுகைகள் மாசடைந்து அதன் பொலிவை இழக்கின்றன. பல ஆறுகளில், குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல், நிலத்தடி நீர் குறைந்து, விவசாயமும் பாதிப்படைகிறது.


மழைநீரை சேமிக்க, போதுமான அளவு மணல், ஆற்றில் இருக்க வேண்டியது அவசியம். அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால், ஆற்றுப்படுகைகளில் வெப்பம் அதிகரித்து, நமக்கு நாமே விளைநிலங்களை அழித்து வருகிறோம். நிலத்தடி நீரை சேமிப்பதில் ஆற்று மணல் முக்கிய பங்கு வகிப்பதுடன், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து மணல் நம்மை பாதுகாக்கிறது. 


ஓர் ஆறு உயிர்ப்புடன் இருக்க வேண்டுமானால், தட்பவெப்பநிலை, கரையும் தாதுப்பொருட்கள், தாவரம் மற்றும் விலங்குகள் மூன்று காரணிகள் முக்கியமாக தேவை. ஆறுகளும், அதனை சார்ந்த உயிரினங்களும் அழியாமல் பாதுகாத்தால் மட்டுமே அடுத்த தலைமுறையினர் நிம்மதியாக உயிர் வாழ முடியும்.



சுரண்டல்காரர்களிடமிருந்து இயற்கை வளத்தை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. ஆனால், காவல்துறையினர், மணல் மாபியாக்களுக்கு ஆதரவாக செயல்படுவது பெரும் வேதனை. சாத்தான்குளம் லாக்அப் மரணத்துக்கு (இரட்டை கொலை) பிறகும் காவல்துறையினர் திருந்தவில்லையா? நீதிமன்ற உத்தரவை மீறி, மணல் மாபியாக்களுக்கு ஆதரவளிக்கும் அளவுக்கு காவல்துறைக்கு தைரியம் கொடுத்தது யார்? இந்த விவகாரத்தில் மிக கடுமையான உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என சென்னை ஐகோர்ட் மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு பிறகாவது காவல்துறை தனது தவறை திருத்திக்கொள்வது நல்லது.

No comments:

Powered by Blogger.