தினகரன் தலையங்கம்(08-12-2020) - உடல்நலனும் முக்கியம்


கொரோனா தடுப்பு ஊரடங்கால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. பள்ளிகள், கல்லூரிகள் திறப்புக்கான தேதி, அரசு தரப்பில் அவ்வப்போது அறிவிக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால், ஒவ்வொரு முறையும் தள்ளி வைக்கப்பட்டது. கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும்  தேர்வு நடத்தப்பட்டு, மற்ற ஆண்டுகளில் படிக்கும் மாணவர்கள் அடுத்த  ஆண்டு கல்வி தொடர அனுமதிக்கப்பட்டனர். 


நடப்பு கல்வியாண்டுக்கான  மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடத்தப்பட்டு ஆன்லைனில் பாடங்கள்  நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் சுமார் 6 மாதங்களாக, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், மீண்டும் திறப்பது குறித்து, தமிழக அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இதையடுத்து தமிழகத்தில் நேற்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இறுதியாண்டு மாணவர்கள் மட்டும் கல்லூரிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.


கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர். சமூக இடைவெளியுடன் வகுப்புகள் நடந்தன. அரசு அறிவித்துள்ளபடி, மாணவர்களை பகுதி பகுதியாக பிரித்து சுழற்சி முறையில் பாடங்கள் எடுக்கப்பட்டது. ஒரு நபர் இடைவெளி விட்டு வகுப்பறையில் மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர். பெற்றோருக்கு கொரோனா இருந்தால், மாணவர்கள் வகுப்புகளுக்கு வரக்கூடாது என்றும், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் படிக்க விரும்பினாலும், அவர்களுக்கான வசதிகளை செய்து தர வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.  


இதன்படியே கல்லூரி சென்ற மாணவர்கள், புதுவிதமான அனுபவத்தை உணர்ந்ததாகவும், நெருக்கமான நண்பர்களிடம் கூட, சகஜமாக பேச முடியாமல் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். முதலாம், 2ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளும், அரசு ஆலோசனைப்படி விரைவில் திறக்கப்படலாம் என்ற பேச்சு பரவலாக உள்ளது. பருவமழை முடிந்ததும் பள்ளிகள் திறப்பு குறித்து, பரிசீலிக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


ஆந்திரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளை திறந்த சில நாட்களிலேயே ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியது. தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கும் சூழலில், கல்லூரிகள் திறக்கப்பட்டாலும், மாணவர்கள், ஆசிரியர்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்குமாறு டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். 


டாக்டர்கள் கூறுகையில், ‘‘கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தை விட, தற்போது அதிக பாதுகாப்பு உணர்வுடன் இருப்பது மிகவும் அவசியம். அலட்சியம் காரணமாகவே, பல நாடுகள், இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா 2வது அலை பரவி உள்ளது. அரசு தொடர்ந்து தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனால் நாம் 90 சதவீத இயல்பு வாழ்க்கைக்கு வந்து விட்டோம். இன்னும், 6 மாதங்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்வது நல்லது.


தமிழகத்தின் தற்போதைய குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை கொரோனா பரவலுக்கு எளிதில் வழி வகுக்கும்’’ என்கின்றனர். அடுத்தடுத்து கல்லூரி வகுப்புகள், மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால், மாணவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கல்வி முக்கியம்தான். அதே நேரம் உடல்நலனிலும் நாம் அக்கறை காட்டுவது காலத்தின் கட்டாயம்.

No comments:

Powered by Blogger.