கேஸ் சிலிண்டர் விலை கடும் உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
எல்பிஜி சமையல் கேஸ் சிலிண்டர்கள் மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் திருத்தி வருகிறது. இந்நிலையில், சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமையல் சிலிண்டரின் (14.2 கிலோ) விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய விலை நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, தலைநகர் டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை 769 ரூபாயாக உயரும். சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 785 ரூபாயாக உயரும்.
ஒவ்வொரு மாதமும் முதல் நாளே கேஸ் சிலிண்டர் விலையை திருத்தி பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிடும்.
மாநிலத்தில் விதிக்கப்படும் வரிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திலும் கேஸ் சிலிண்டர் விலை மாறுபடுகிறது. பிப்ரவரி 4ஆம் தேதியன்று நான்கு மெட்ரோ நகரங்களில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை மாதம் முதல் சிலிண்டர் விலை 594 ரூபாயாக இருந்தது. பின்னர் கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. பிறகு டிசம்பர் 16ஆம் தேதி மீண்டும் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது.
ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தற்போது எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments: