50 லட்சம் தமிழர்களின் ஆதார், மொபைல் எண்கள் இணையத்தில் கசிவு – தமிழ்நாட்டை அதிரவைக்கும் ஹேக்கர் கும்பல்!
அங்கே தொட்டு இங்கே தொட்டு தற்போது தமிழ்நாட்டிலேயே ஹேக்கிங் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் மத்திய அரசின் தரவுகளில் கைவரிசை காட்ட முயன்ற ஹேக்கர் கும்பல் தமிழ்நாடு அரசின் இணையதளத்திற்குள் ஊடுருவியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து (Tnpds.gov.in) மக்களின் தரவுகளை ஹேக்கர்கள் திருடியிருக்கிறார்கள். இந்த ஹேக்கை பெங்களூரைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான TechniSanct கண்டுபிடித்துள்ளது.
இந்த தரவுகளை 1945VN என்ற பெயர் கொண்ட ஹேக்கர் கும்பல் திருடியிருப்பதாகவும், தமிழர்களின் தரவுகளை விற்பதற்காக இணையத்தில் கசியவிட்டதாகவும் கூறியுள்ளது. 49 லட்சத்து 19 ஆயிரத்து 668 தமிழர்களின் ஆதார் விவரங்கள், அவர்களின் வீட்டு முகவரி உள்ளிட்டவற்றை திருடியிருக்கிறது. அதேபோல 3 லட்சத்து 59 ஆயிரத்து 485 மொபைல் எண்களையும் ஹேக் செய்துள்ளது. அரசு சேவைகளைப் பெறவும் சான்றிதழ்களை ஒருங்கினைக்கும் திட்டமாக “மக்கள் நம்பர்” என்ற பிரத்யேக எண் சேவையை 2019ஆம் ஆண்டு அரசு அறிமுகம் செய்தது. இதில் பிறந்த குழந்தையின் விவரங்கள் கூட அடங்கியிருக்கின்றன.
இதுதொடர்பான தரவுகளையும் கைவரிசை காட்டியிருக்கிறார்கள் ஹேக்கர்கள். இவ்வளவு ஏன் யாருக்கு யார் என்ன உறவு என்பதைக் கூட விட்டுவைக்காமல் மொத்த குடும்ப உறுப்பினர்களின் தரவுகளையும் ஆட்டையை போட்டுள்ளது தான் அதிர வைக்கிறது. இதுதொடர்பாக TechiniSanct நிறுவனத்தின் சிஇஓ நந்தகிஷோர் ஹரிகுமார் கூறுகையில், “ஹேக்கர்கள் திருடப்பட்ட தமிழர்களின் தரவுகள் ஜூன் 28ஆம் தேதி இணையத்தில் கசியவிடப்பட்டது. நாங்கள் உடனே கண்டுபிடித்துவிட்டோம். ஆனால் கசிந்த ஒரு மணி நேரத்திற்குள் அவற்றை ஹேக்கர்கள் டெலிட் செய்துவிட்டார்கள். அதேபோல இதுகுறித்து தமிழ்நாடு சைபர் பிரிவின் ஏடிஜிபியிடம் தகவல் கொடுத்துவிட்டோம்.
இந்தியாவைச் சேர்ந்த அவசரகால கணினி பாதுகாப்பு குழுவிடம் (CERT-in) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளை நேரடியாக அரசின் இணையதளத்திலிருந்து திருடினார்களா அல்லது மூன்றாம் தர இணையதளங்களில் திருடினார்களா என்பது குறித்து நாங்கள் மேலும் ஆய்வு செய்துவருகிறோம்” என்றார். தமிழ்நாடு உணவு வழங்கல் துறையில் கிட்டத்தட்ட 6.8 கோடி தமிழர்களின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில் சிறிய துரும்பை தான், அதாவது சுமார் 50 லட்சம் மக்களின் தரவுகளைத் தான் ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.
இந்தியாவில் இதுபோன்று அரசு இணையதளங்களிலுள்ள மக்களின் விவரங்களில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டுவது ஒன்றும் புதிதான ஒன்றல்ல. ஏற்கெனவே தெலங்கனா அரசின் இணையதளத்திலிருந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களின் தரவுகளையும் ஹேக்கர்கள் திருடினர். கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் தனிப்பட்ட இணையதள பக்கத்திலும் ஆட்டையைப் போட்டு டார்க் வெப்பில் கசிய விட்டவர்கள் தான் ஹேக்கர்கள். இது ஹேக்கர்களின் காலம் என்பதால் முன்பை விட அதிக சைபர் பாதுகாப்புடன் அரசுகள் செயல்பட வேண்டியது கட்டாயம்.
No comments: