நீங்கள் தூக்கி வீசிய பழைய போன் நம்பரால் வரப்போகும் புதிய ஆபத்து – அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!
நீங்கள் புதிய சிம் எண்ணை வாங்கியதற்குப் பிறகு உங்களின் பழைய சிம் எண்ணை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? உங்களின் பழைய எண் முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டதா அல்லது வேறு யாருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று தேடிப் பார்த்துள்ளீர்களா? இதை யாரும் செய்யவில்லை என்றால் உங்களின் பழைய எண் என்னவாகியிருக்கும், அதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய எண்களைக் கண்டுபிடிப்பதற்குப் பதில் பழைய எண்களை மறுசுழற்சி செய்து வேறு ஒருவருக்கு அளித்துவிடும். ஆம் அன்று நீங்கள் உபயோகித்த அதே எண்ணை வேறு ஒருவர் இன்று பயன்படுத்திக் கொண்டிருப்பார். இப்படி மறுசுழற்சி செய்து மற்றொருவருக்கு கொடுக்கும் பட்சத்தில் உங்களின் பழைய எண்ணுடன் தனிப்பட்ட தகவலும் புதிதாக அந்த எண்ணை பெறுபவர்களுக்கும் தெரியும் என்கிறது ஒரு ஆய்வு.
போன்பே, பேடிஎம், கூகுள் பே உள்ளிட்டவற்றில் உங்களின் பழைய எண்ணே நீடித்தால், ஓடிபி அந்த எண்ணை பயன்படுத்திக் கொண்டிருக்கும் புதிய உரிமையாளர் மொபைலுக்கு செல்லும். இதைத் தான் அபாயம் என்கிறது அந்த ஆய்வு. இது ஒரு சிறு உதாரணமே. இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள் உங்கள் பழைய எண்ணை உபயோகிக்கும் புதிய உரிமையாளருக்குச் சென்று சேரலாம். அமெரிக்காவைச் சேர்ந்த பிரின்ஸ்டான் பல்கலைக்கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுபோன்ற அதிர்ச்சி முடிவுகள் தெரியவந்திருக்கின்றன.
மறுசுழற்சி செய்யப்பட்ட சுமார் 200 பழைய எண்களை அவர்கள் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார்கள். அதில் 19 எண்களுக்கு பழைய உரிமையாளரின் தகவல்கள் மெசெஜ் வாயிலாக வந்திருக்கின்றன. அந்த மெசெஜ்களை பார்த்த அவர்கள் எதுவுமே தெரியாமல் விழித்திருக்கிறார்கள். சமீபத்தில் புதிய எண் வாங்கிய ஒருவருக்கு ரத்த பரிசோதனை செய்த முடிவுகள் வந்திருக்கிறது. ஆனால் அவர் ரத்த பரிசோதனை செய்யவே இல்லை.
விசாரிக்கையில் அந்த எண்ணின் பழைய உரிமையாளர் ரத்த பரிசோதனை செய்திருக்கிறார் என்று தெரியவந்திருக்கிறது. உங்களின் எண் மோசடி செய்யும் நபரின் கையில் சிக்கினால் பெரும் ஆபத்து நேரிடலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஆகவே பழைய எண்ணை எதற்கெல்லாம் நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்களோ, அங்கே இருந்து உடனடியாக நீக்குங்கள். மேலும் அதில் புதிய எண்ணைக் கொண்டு புதுப்பித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
No comments: