வி.ஐ.பி-க்களின் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டது எப்படி? - திடுக்கிடும் பின்னணி

 


முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவில் தொடங்கி வாரன் பஃபெட், பில் கேட்ஸ், எலான் மஸ்க், ஜெஃப் பஸாஸ் எனப் பிரபலங்கள் பலரது ட்விட்டர் கணக்குகளும் நேற்று ஹேக் செய்யப்பட்டன. இப்படிக் கைப்பற்றப்பட்ட பெரும் புள்ளிகளின் கணக்குகளிலிருந்து `குறிப்பிட்ட பிட்காயின் அட்ரஸுக்கு உடனடியாகப் பணம் அனுப்பினால் அது இரட்டிப்பாகி உங்களுக்கு திரும்பிவரும்' எனப் பதிவிடப்பட்டது. இந்தப் பதிவுகள் மிக விரைவில் நீக்கப்பட்டாலும் சமூக வலைதளங்களின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை மீண்டும் மக்கள் மத்தியில் எழுப்பியிருக்கிறது இந்தச் சம்பவம். சமூக வலைதளங்களில் இதுவரை நடந்திருப்பதிலேயே மிகப்பெரிய ஹேக்கிங் சம்பவம் இதுதான் எனக் குறிப்பிடுகின்றனர் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள். இது எப்படி நிகழ்த்தப்பட்டது என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.



எப்படி நடந்தது எனப் பார்ப்பதற்கு முன்பு என்ன நடந்தது என்பதைச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். மேலே குறிப்பிட்டது போலப் பல முக்கிய புள்ளிகளின் கணக்குகளைக் கைப்பற்றியிருக்கின்றனர் ஹேக்கர்கள். தனிமனித கணக்குகள் மட்டுமல்லாமல் ஆப்பிள், உபர் போன்ற நிறுவனங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்குகளும் இப்படிக் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.









``எங்களை வாழ வைத்திருக்கும் இந்தச் சமூகத்துக்கு திருப்பித் தர முடிவுசெய்துள்ளோம். பிட்காயினை ஆதரிக்கிறோம், நீங்களும் அதைச் செய்ய வேண்டும். கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் பிட்காயின் அட்ரஸுக்கு உடனடியாகப் பணம் அனுப்புங்கள். அதை அப்படியே இரண்டு மடங்காகத் திருப்பி அனுப்புகிறோம். குறுகிய காலத்துக்கே இதை நாங்கள் செய்யப்போகிறோம். விரையுங்கள்"



பதிவிடப்பட்ட ட்வீட்களின் சாராம்சம் இதுதான். பதிவிடப்படும் கணக்கைப் பொறுத்து சிறிய மாற்றங்களை மட்டும் செய்திருந்தனர். `CryptoForHealth என்ற அமைப்புடன் கைகோத்திருக்கிறோம். பிட்காயினில் பணம் அனுப்பினால் பாதிப்படைந்திருக்கும் மக்களுக்கு உதவுவோம்' என்றும் சிலரது கணக்குகளில் பதிவுகளிடப்பட்டன.



முதலில் இது எப்படி நடந்தது, யார் பின்னணியில் இருக்கிறார்கள் என எதுவும் புரியாமல் குழம்பி நின்றது ட்விட்டர். பிரபலங்களின் இந்தக் கணக்குகளை ஹேக்கர்களிடமிருந்து மீட்க முடியாமல் திணறியது. உதாரணத்துக்கு, டெஸ்லா நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க்கின் கணக்கிலிருந்து இந்தப் பதிவு நீக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் பதிவிடப்பட்டது. வேறு வழி தெரியாத ட்விட்டர் மொத்தமாக ப்ளூ டிக் வாங்கிய அனைவரது கணக்குகளின் செயல்பாடுகளையும் நிறுத்தி வைத்தது.


``பல கணக்குகளைப் பாதித்திருக்கும் இந்த ஹேக்கிங் சம்பவம் குறித்து அறிவோம். இது குறித்து விசாரித்து வருகிறோம். இதை நாங்கள் விசாரித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உங்களால் புதிதாக ட்வீட் செய்யவோ பாஸ்வேர்டு மாற்றவோ முடியாது" என்று முதல்கட்டமாகத் தகவல் தெரிவித்திருந்தது ட்விட்டர்.



இது பெரிய சர்ச்சையாக வெடிக்கக் குடியரசு கட்சியின் செனேட்டர் ஜாஷ் ஹாவ்லி உடனடியாக ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டார்ஸிக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதினார். ``அதிபர் ட்ரம்ப்பின் கணக்குக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா, எத்தனை பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்? உடனடியாக நீதித்துறையையும் FBI-யையும் தொடர்புகொள்ளுங்கள். மேலும், பெரிதாக வெடிப்பதற்கு முன் இந்தப் பிரச்னையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவாருங்கள்" என அந்தக் கடிதத்தால் குறிப்பிட்டார் அவர்.



பின்னணி தெளிவுறவில்லை என்றாலும் இத்தனை பிரபலங்களின் கணக்குகளையும் ஒவ்வொன்றாக ஹேக் செய்திருக்க வாய்ப்பில்லை, ட்விட்டர் உள்கட்டமைப்பு அளவில்தான் எதோ பிரச்னை இருந்திருக்கிறது என்ற பேச்சு அடிபட்டது. வல்லுநர்களும் இதையே குறிப்பிட்டனர். ``இதுவரை சமூக வலைதளங்களில் பல ஹேக்கிங் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், இந்த அளவில் ஒரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை" என்கின்றனர் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள். இது ட்விட்டருக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பங்குச்சந்தையில் பெரும் சரிவைக் கண்டுள்ளது அந்த நிறுவனம்.




``ட்விட்டரில் எங்களுக்கு இது மிகவும் கடுமையான நாள். இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு வருந்துகிறோம். இது எதனால் நடந்தது எனத் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். இந்தச் சம்பவம் குறித்து எங்களுக்கு முழு புரிதல் வந்தவுடன் இதைப் பற்றி அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்" என்று ட்விட்டர் CEO ஜாக் டார்ஸி தெரிவித்தார்.



பெரிய ஆதாயம் இல்லை!

இப்படி சமூக வலைதள வரலாற்றிலேயே காணாத `Security Breach' எனக் குறிப்பிடப்பட்டாலும் இதை வைத்து ஹேக்கர்கள் பெரிய ஆதாயம் எதுவும் பார்த்ததாகத் தெரியவில்லை. பொதுவெளியில் இருக்கும் பிட்காயின் பரிமாற்ற தரவுகளின்படி சுமார் $110,000 அளவிலான பிட்காயின்களை மட்டுமே பெற்றிருக்கிறார்கள். அதாவது, கோடி கணக்கான மக்களைச் சென்று சேரும் இத்தனை பிரபலங்களின் கணக்குகளைக் கொண்டும் சுமார் 1 கோடிக்கும் குறைவான பணத்தையே பெற்றிருக்கிறார்கள். இப்படியான முயற்சியை வைத்தே இது வடகொரியா போன்ற நாடுகளின் திட்டமிட்ட ஹேக்கிங் அல்ல என உறுதிப்படுத்திவிடலாம்.



ஹேக் செய்யப்பட்டவர்கள் மிக முக்கிய ஆளுமைகள். ஒரு தவறுதலான ட்வீட்டில் என்ன வேண்டுமானாலும் நடந்துவிட முடியும். `என்ன பாஸ் ஓவர் பில்ட்-அப்பா இருக்கே!' என்கிறீர்களா? எலான் மஸ்க்கின் ஒரு ட்வீட்டில் டெஸ்லாவின் பங்குகளின் மதிப்பு சடசடவென சரிந்தது நினைவில் இருக்கிறதா! அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, அடுத்த அதிபர் வேட்பாளராகத் தயாராகும் ஜோ பைடன் என முக்கிய அரசியல் பிரமுகர்களின் கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. 



வெறுப்பையும், வன்மத்தையும் பரப்ப இந்தக் கணக்குகள் பயன்படுத்தப்படலாம். இன்னும் இப்படி பல விஷயங்களைச் சொல்லலாம். நமக்குப் பிடித்தாலும் பிடிக்கவில்லையென்றால் இன்று நாம் தொலைத்தொடர்பு மற்றும் கருத்து பரிமாற்றத்திற்கு அதிகம் பயன்படுத்துவது இந்த சேவைகளைத்தான். வானிலை அறிக்கை தொடங்கி மாஸ்டர் அப்டேட் வரை இன்று அனைத்தும் ட்விட்டரில்தான். இந்த தளங்களின் சக்தியை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. இது மாதிரியான ஹேக்கிங் சம்பவங்களால் மோசமான விளைவுகள் எதுவும் நடந்திருக்க முடியும்.



No comments:

Powered by Blogger.