மோடியின் கணக்கை முடக்கியது யார்? ஓயாத ட்விட்டர் சர்ச்சை! #ModiTwitter
ஜூலை மாதம்தான் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வாரன் பஃபெட், பில் கேட்ஸ், எலான் மஸ்க் போன்ற முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. டெக் உலகில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட இணையதளத்தின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கிறது.
`PM National Relief fund கிரிப்டோகரன்சி மூலம் பணம் அனுப்புங்கள்' என பிட்காயின் அட்ரஸ் ஒன்றுடன் வரிசையாக சில ட்வீட்கள் மோடியின் கணக்கிலிருந்து இன்று அதிகாலை பதிவிடப்பட்டுள்ளன. ஜூலை மாதம் நடந்த ஹேக்கிங் சம்பவத்திலும் இதுபோன்று பிட்காயின் கேட்டுத்தான் பதிவுகள் போடப்பட்டிருந்தன.
மோடியின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை ட்விட்டரும் உறுதிப்படுத்தியிருக்கிறது. உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
@narendramodi_in என்ற மோடியின் இணையதளத்தின் (https://www.narendramodi.in/) ட்விட்டர் ஹேண்டில்தான் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கணக்கை 25 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். 6.1 கோடி பேர் பின்தொடரும் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கிற்கு (@narendramodi) எந்தப் பாதிப்பும் இல்லை.
இந்தச் சம்பவத்திற்கு 'John Wick' என்ற ஹேக்கிங் கும்பல் பொறுப்பேற்றிருக்கிறது. பிரபல ஹாலிவுட் கதாபாத்திரத்தின் பெயர் இது. இதை ஹேக் செய்யப்பட்ட மோடியின் கணக்கிலேயே தெரிவித்தும் இருக்கிறார்கள். சில நாள்களுக்கு முன்பு நடந்த Paytm mall ஹேக் சம்பவம் இதே கும்பலால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்பட்டது. 'அது நாங்கள் இல்லை' எனவும் மோடி கணக்கிலேயே ட்வீட் செய்திருக்கிறார்கள்.
ஜூலையில் பிரபலங்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டபோதே ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது இந்திய அரசின் சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT. 'சம்பவம் எதனால் நடந்தது, அதைத் தடுக்க ட்விட்டர் எடுத்துவரும் நடவடிக்கை என்ன?' என அதில் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், இரண்டு மாதங்களுக்குள் இப்படி ஒரு சம்பவம் மீண்டும் நடந்திருக்கிறது.
ட்விட்டரின் ஊழியர்கள் சிலர் மட்டும் பயன்படுத்தும் அட்மின் டூலை ஹேக்கர்கள் கைப்பற்றியதால்தான் ஜூலை மாதம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. இப்போது மோடியின் கணக்கு அதே மாதிரிதான் ஹேக் செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதைப் பற்றி விசாரித்து வருகிறோம் என்றே ட்விட்டர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜூலை மாதம் நடந்த சம்பவத்தின் மாஸ்டர் மைண்ட் 17 வயது சிறுவன் ஒருவன்தான் என்பது கடந்த மாதம் தெரியவந்தது. அவன் மீதும் அவனுக்கு உதவிய இருவர் மீதும் அமெரிக்காவில் வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன.
Tag: Twitter | PMModi | ModiTwitter
No comments: