10 நிமிடங்களில் PAN Card பெறுவது எப்படி?
இந்தியாவில் வரி செலுத்துவோர் அனைவரும் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு ஆவணம் நிரந்தர கணக்கு எண் எனப்படும் PAN Card (Permanent Account Number) இது ஒரு 10 இலக்க வரிவடிவ எண் குறியீடு கொண்டது.இதனை ஒரு பிளாஸ்டிக் அட்டை வடிவத்தில் இந்திய வருமான வரித்துறை வழங்குகிறது.

இந்தியக் குடிமகனாகவோ அல்லது வெளி நாட்டில் வாழும் இந்தியராகவோ (NRI) இருக்கும் ஒருவர், இந்திய அரசாங்கத்திடம் வரி செலுத்தினாலோ, பங்குச்சந்தையில் முதலீடு செய்தாலோ,வியாபாரத்தில் ஈடுபட்டாலோ அல்லது ஏதேனும் ஒருவகையில் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தாலோ அவரிடம் கண்டிப்பாக பான் (PAN) கார்டு இருக்க வேண்டும்.
தனி நபர், இந்து கூட்டுக் குடும்பம், நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தனித்தன்மையான பான் எண் வழங்கப்படுகிறது. முன்பெல்லாம் புதிதாக பான் கார்டு வாங்க விரும்புவோர், உரிய விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து நேரடியாக அல்லது இணையவழியில் சமர்ப்பித்தால் பான் கார்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் இந்த நடைமுறைக்கு சில நாட்கள் ஆகும்.
தற்போது ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு 10 நிமிடங்களில் பான் கார்டு வழங்கும் நடைமுறையை மத்திய நிதியமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. ஒருவரிடம் ஆதார் கார்டு மட்டுமிருந்தால் போதும். இணையத்தில் ஒரு சில கிளிக்குகள் மூலம் எலக்ட்ரானிக் வடிவத்தில் உடனடியாகப் பான் கார்டு (ePAN) பெற்றுவிடலாம்.
நிபந்தனைகள்:
# ePAN விண்ணப்பம் செய்ய ஆதார் அட்டை அவசியம்.
# பான் கார்டு இல்லாத மற்றும் இதுவரை பான் கார்டுக்கு விண்ணப்பிக்காதவர்கள் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும்.
# ePan விண்ணப்பம் செய்பவரின் ஆதாரில் உள்ள மொபைல் எண்ணுக்கு வருமான வரித் துறை OTP பாஸ்வேர்டை அனுப்பும். எனவே விண்ணப்பதாரரின் மொபைல்போன் எண் அவருடைய ஆதாருடன் இணைந்திருப்பது அவசியம்.
# ஆதார் விபரங்களில் பிறந்த தேதி முழுமையாகப் (DD-MM-YYYY)பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
# ePAN விண்ணப்பிக்கும் நாளில் பயனர் மைனராக இருக்கக் கூடாது.
# மதிப்பிழந்த ஆதார் கார்டு (Invalid aadhaar) வைத்திருப்போரால் இந்த வசதியைப் பயன்படுத்தி இன்ஸ்டண்ட் பான் கார்டு பெறமுடியாது.
10 நிமிடங்களில் e-PAN உருவாக்கும் வழிமுறை
1) e-PAN-ஐ உருவாக்க பயனர் முதலில் வருமான வரித்துறையின்
https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற வலைதளத்திற்கு செல்லவேண்டும்.
2) இங்கு உள்ள பல்வேறு வாய்ப்புகளில் "Instant PAN through Aadhaar" என்பதைக் க்ளிக் செய்யவும்.
3) விண்ணப்பதாரர் முன் ஒரு புதிய விண்டோ திறக்கப்படும். அதில் பயனர் "Get New PAN" என்பதைக் கிளிக் செய்யும்போது அடுத்த திரை திறக்கப்படும்.
4) இதில் பயனர் தம் ஆதார் அட்டை எண்ணை உள்ளிட வேண்டும்.
5) செயல்பாட்டைத் தொடர்வதற்கு, "Captcha Code" சரியாக நிரப்ப வேண்டும்.
6) I confirm that என்பதில் சரி(Tick) குறியிட்டு Generate Aadhar OTP என்பதைக் க்ளிக் செய்யவும்.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எணுக்கு OTP எண் ஒன்று அனுப்பி வைக்கப்படும்.
7) OTP-ஐ தேவையான இடத்தில் நிரப்பிய பிறகு பயனர் தம் ஆதார் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.
8) அடுத்து தமது மின் அஞ்சல் முகவரியை நிரப்பித் தொடர வேண்டும்.இந்த படிநிலைகளுக்குப் பின் பயனரின் e-KYC தரவு e-PAN க்கு மாற்றப்படும்.
9) அதிகபட்சம் பத்து நிமிடங்களில் இந்த செயல்முறை முற்றிலுமாக முடிவடைந்துவிடும்.முழு செயல்முறையும் முடிந்ததும் 10 இலக்க PAN எண் உருவாக்கப்படும்.
10) இறுதியாக பயனர் தம் e-PAN கார்டை தம் மின்னஞ்சலில் (E-mail) Pdf வடிவத்தில் பெறலாம்.தம் ஆதார் அட்டை எண்ணை சமர்ப்பித்து e-PAN கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Tags: PAN Card | IT | PAN | EPAN
No comments: