தினத்தந்தி தலையங்கம்(28-11-2020) - மறக்க முடியுமா இந்த மரடோனாவை...!!!

 


போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒருமுறை வாழ்க்கையைப்பற்றி குறிப்பிடும்போது, ‘ஒரு மனிதனின் வாழ்க்கை முட்புதர்களையும், களைகளையும் கொண்ட நிலமாக இருந்தாலும், அங்கும் நல்ல விதை முளைத்து எல்லோருக்கும் பயன்தரத்தக்க ஒரு நல்லமரமாக வளர எப்போதும் ஒரு இடம் உண்டு’ என்று கூறினார். 



அதுபோல, ஏழ்மையான ஒரு பெற்றோருக்கு பிறந்து, குடிசைப் பகுதியில் இளமையில் வாழ்ந்தாலும், அர்ஜென்டினா நாட்டை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் புகழை சேர்த்த டியகோ ஆர்மன்டோ மரடோனா, தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடிய ஒரு மாதத்துக்குள் மாரடைப்பால் உயிரிழந்தார்.



கால்பந்து விளையாட்டின் கடவுளாக போற்றப்பட்டவர், மரடோனா. ஒரு ‘மேஜிக்’ நிபுணர்போல், ரசிகர்களின் கண்களே நம்பாத அளவுக்கு, பந்துகளை லாவகமாக உதைத்து கோலாக்குவதில் வல்லவர். 1986-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் மொத்தம் 5 கோல்கள் அடித்து கோப்பையை வென்று அர்ஜென்டினாவுக்கு உலக அரங்கில் புகழை கொடுத்தவர். 



பிரேசிலைச் சேர்ந்த பீலே விளையாடிய காலத்தில், அவரது அணியில் நிறைய சிறந்த வீரர்கள் இருந்தனர். ஆனால் மரடோனா விளையாடும்போது அந்த அணியில் குறிப்பிட்டு சொல்லும்படியான திறமைகொண்ட வீரர்கள் கிடையாது. அந்த அணியின் கேப்டனான மரடோனாதான் கால்இறுதியில் இங்கிலாந்தையும், அரைஇறுதியில் பெல்ஜியத்தையும், இறுதிப்போட்டியில் மேற்கு ஜெர்மனியையும் தோற்கடித்ததில் முக்கிய பங்காற்றினார்.



அர்ஜென்டினா அணிக்காக 91 போட்டிகளில், 34 கோல்கள் அடித்திருந்தாலும், 1986-ம்ஆண்டு உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், அவர் நீண்டதூரத்தில் இருந்து பந்தை கடத்தி கொண்டுவந்து, இங்கிலாந்தின் 5 வீரர்களை சாதுர்யமாக ஏமாற்றி அடித்த 2-வது கோல்தான் இந்த நூற்றாண்டின் சிறந்த கோலாக கருதப்பட்டது. 



மின்னல் வேகத்தில் அவர் அடிக்கும் கோல்கள் கையால் அடித்தாரா?, காலால் அடித்தாரா? என்பதுகூட யாருக்கும் தெரியாது. இதே ஆட்டத்தில் அவர் கையால் பந்தை கோலுக்குள் அடித்ததாக ஒரு பேச்சு வந்தபோது, ‘அது கடவுளின் கை அடித்த கோல்’ என்று கூறிவிட்டார். 2012-ம்ஆண்டு கேரளாவில் உள்ள கண்ணூருக்கும், 2017-ம்ஆண்டு கொல்கத்தாவுக்கும் வந்திருந்த நேரத்தில், ரசிகர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்யும் வகையில், பந்தை காலால் மாறிமாறி கடத்தி அடித்து, நெஞ்சில் ஏந்தி அடித்து, தலையால் முட்டியதைத்தான் மறக்க முடியுமா!.



ஒரு விளையாட்டில், ஒருவர் எப்படி புகழின் உச்சிக்கு சென்று, ஆண்டுகள் மறைந்தாலும், ரசிகர்களின் மனதில் இருந்து மறைய முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த மரடோனா, ஒரு வீரர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார். 1994-ம்ஆண்டு உலக கோப்பை போட்டிக்காக ஆடியபோது, போதை மருந்து சாப்பிட்டார் என்று வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு போதை மருந்துகளுக்கு அடிமையானார். உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் சிகிச்சைகளுக்கு பிறகு மீண்டார்.



மரடோனா இந்தியா மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். இந்தியாவுக்காக அவர் சொன்ன அறிவுரையை இந்திய கால்பந்து சம்மேளனமும், மத்திய அரசாங்கமும் முக்கியமாக எடுத்துக்கொண்டால், நிச்சயம் இந்தியாவிலும் நூற்றுக்கணக்கான மரடோனாக்கள் உருவாக முடியும். கொல்கத்தாவுக்கு அவர் வந்திருந்தபோது ஒரு பேட்டியில், ‘உங்கள் கால்பந்து சம்மேளனத்திடம் சொல்லுங்கள். அவர்கள் உங்கள் நாட்டில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்துவதில் தீவிரமாக ஈடுபடவேண்டும். ஏனெனில், இந்த நாட்டில் கால்பந்து விளையாட்டு மீது தணியாத ஆர்வம் இருக்கிறது. 



ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் விளையாடியதை பார்த்தேன். சரியான கட்டமைப்பு வசதிகளையும், பயிற்சிகளையும் அளித்தால், இந்தியா மிகச்சிறந்த இடத்துக்கு முன்னேற முடியும்’ என்று கூறினார். இதையே மரடோனா கூறிய கடைசி அறிவுரையாக ஏற்று, இந்திய கால்பந்து விளையாட்டை உலக அரங்கில் மிளிரச் செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கவேண்டும் என்பதே, மரடோனாவுக்காக கண்ணீர் சிந்தும் இந்திய ரசிகர்களின் கனவாகும்.

No comments:

Powered by Blogger.