தினகரன் தலையங்கம்(28-11-2020) - சீனாவின் அடாவடி

 



இந்திய எல்லையில் ஒரு பக்கம் பாகிஸ்தான் அத்துமீறல்கள் தொடர்கிறது என்றால் மறுபுறம் சீனாவின் ஆக்கிரமிப்பு  தொடர்கிறது. இரு அண்டைநாட்டையும் கண்கொத்தி பாம்பாக கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் நமது நாட்டின் ராணுவம் உள்ளது. கிழக்கு லடாக்கில் அத்துமீறும் சீன ராணுவம் ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டே மறுபக்கம் படைகளை எல்லையில் குவித்து வருகிறது. 



இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  தங்களது தயாரிப்பான செயலிகளை கொண்டு இந்தியாவை உளவு பார்ப்பதாக வந்த தகவலை  தொடர்ந்து சீனாவின் பல செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது. இது வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிரான நடவடிக்கை என்று சீனா கண்டனம் தெரிவித்தாலும் தகவல் தொழில்நுட்ப சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியா கூறுகிறது.



இந்நிலையில், சீன மத்திய ராணுவ ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் ஜிங்பிங், ராணுவ பயிற்சிகள் நிஜ போரை போன்று இருக்க வேண்டும். எப்போதும் தயார் நிலை தேவை என உத்தரவிட்டுள்ளார்.சீனாவின் மத்திய ராணுவ ஆணையம் என்பது 20 லட்சம் வீரர்களை கொண்ட ராணுவத்தின் தலைமை அமைப்பாகும். இதன் தலைவராக அதிபரே உள்ளார்.  



 சீன கம்யூனிஸ்ட் கட்சி, தங்கள் நாட்டு ராணுவத்தை 2027 க்குள் அமெரிக்க ராணுவத்துக்கு இணையானதாக மாற்ற திட்டமிட்டுள்ளது. சீனா-இந்தியா இடையே கிழக்கு லடாக்கில் கடந்த 6 மாதமாக மோதல் ஏற்பட்டுள்ள சூழலில்  சீனாவின் போக்கு கண்காணிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.  இந்தியா - சீனா இடையே 3,500 கி.மீ எல்லை உள்ளது. இரு நாடுகளும் தற்போதைய எல்லையின் நிலையை ஏற்கவில்லை. இந்த இரு நாடுகளுக்கும் இடையே 1962ல் ஒருபோரும் நடந்துள்ளது.



முன்னதாக, ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாடுகளின் வீரர்கள் கடுமையாக மோதிக் கொண்டார்கள். அதில் 20 இந்திய வீரர்கள் பலியானார்கள். அப்போது முதல் எல்ஏசி பகுதிகளில் பதற்றத்தை குறைக்க இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்த கொண்டிருக்கின்றன, எல்லையில் சமாதானத்தை ஏற்படுத்துவது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான சம உறவுகளில் தான் சாத்தியமாகும் என்று  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  



சீனாவின் போக்கு எல்லையில் போர் பதற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதால் அந்நாட்டை கண்காணிக்க அதிநவீன டிரோன்களை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா ஓராண்டு வாடகைக்கு வாங்கியுள்ளது. எம்.க்யூ-9பி  என்ற இந்த அதிநவீன டிரோன் கடற்பகுதியில் சீன நாட்டின் நடமாட்டத்தை கண்காணிக்கும். அதே போன்று பி.8 என்ற டிரோன் பாகிஸ்தானை கண்காணிக்கும்.



 அண்டை நாட்டின் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த கங்கணம் கட்டிக்கொண்டு திட்டங்களை செயல்படுத்தும் பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் எல்லை பகுதியில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளை தேசப்பற்றுள்ளவர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.இந்தியாவை வலுக்கட்டாயமாக போருக்கு இழுப்பதற்காக சீனா முயற்சி செய்்கிறதோ என்ற சந்தேகமும் அனைவருக்கும் எழுகிறது. சீனாவுடன்  தோழமை கொண்டாடும் பாகிஸ்தானுக்கும் இதில் பங்கிருக்கலாம் என்ற கோணத்திலும் இப்பிரச்னையை நமது தலைவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.