தினகரன் தலையங்கம்(01-12-2020) - உடல்நலன் காப்போம்


தமிழகத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பல லட்சம் ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கின. பல்லாயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். தற்போது அடுத்த புயல் எச்சரிக்கையால் 5 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, தமிழக அரசு ஊரடங்கை ‘வழக்கம்போல’ டிச. 31 வரை நீட்டித்துள்ளது. மருத்துவக்கல்லூரிகள், கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் செயல்படலாம் உள்பட சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.


பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பில்லை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. ஆனாலும், தற்போதைய நிலவரப்படி நாள்தோறும் சுமார் 1,500 பேர் வரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்குள்ளாகின்றனர். மல்டிலெவல் மார்க்கெட்டிங் போல, கொரோனா மளமளவென பலருக்கு பரவும் நோய் என்பது நாம் அறியாததல்ல. சீனாவில் கடந்தாண்டு நவம்பர் 16ல் துவங்கிய கொரோனா, டிசம்பரில்தான் வேகமெடுத்தது. இதை கருத்தில்கொண்டுதான் இந்தியாவில் மழை, பனி சீசன் தீவிரமெடுக்கும் நவம்பர், டிசம்பரில், கொரோனா வேகமெடுத்து 2வது அலை பரவும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவித்தன.


ஒரு சில மாநிலங்களில் கொரோனா 2வது அலை பரவுவதையும், நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். எனவே, தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்ட வேண்டாம். தமிழகத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. மழைக்காலங்களுக்காகவே ‘காத்திருக்கும்’ டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் நோய்கள் வேகமெடுக்க துவங்கியுள்ளன. முறையான வடிகால் வசதியின்றி சாலைகளில், வீதிகளில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் ஏடிஸ் வகை கொசுக்கள் அதிகளவு உருவாகின்றன. இவை மீண்டும் முழுவீச்சில் டெங்கு நோயை பரப்பி வருகின்றன.


ஏற்கனவே, காய்ச்சல், சளி தொந்தரவு என்றால், கொரோனாவாக இருக்குமோ என்ற அச்சம் மக்களுக்கும், டாக்டர்களுக்கும் உள்ளது. மழையால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பதால், தமிழக சுகாதாரத்துறை மீண்டும் முழுவீச்சில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் நிலவரத்தை அறிய வேண்டும். 



முறையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதே நேரம், மக்களிடம் தற்போது முகக்கவசம், சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைந்து வருகின்றன. இன்னும் சில மாதங்களுக்காவது, கொரோனா தடுப்பு முறைகளை நாம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். பிப்ரவரி வரை குளிர் சீசன் தொடரும் என்பதால், கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நமது உடல்நலனுக்கும் பாதுகாப்பானது.


வீடுகளில் தினமும் குடிக்கவும், குளிக்கவும் சுடுநீரையே பயன்படுத்த வேண்டும். அவசியமல்லாது, மழை நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வீடுகளை சுற்றிலும் டயர்கள், சிரட்டை, பழைய டப்பாக்கள், குடங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், மருத்துவரை அணுகி முறையான மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளவேண்டும். 


3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால், முறையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா ஊரடங்கால் மாணவர்களின் கல்வி, லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இனி முறையான நோய் தடுப்பு முறைகளே இழந்த பொருளாதாரம், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் என்பதை அரசும், மக்களும் உணர வேண்டும். 

No comments:

Powered by Blogger.