HDFC-யின் டிஜிட்டல் பரிவர்த்தனை கோளாறுகள்... இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள்வது எப்படி?

 நவம்பர் மாதக் கடைசியில் இரண்டு நாள்கள் ஹெச்.டி.எஃப்.சி பேங்க்கின் டேட்டா சென்டர் ஒன்றில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக வங்கியின் செயல்பாடுகள் ஸ்தம்பித்தன. வாடிக்கையாளர்கள் அவதியுற்றனர். 



நெட்பேங்க்கிங் மூலம் பணம் டிரான்ஸ்ஃபர் செய்ய இயலவில்லை; யு.பி.ஐ (Unified Payments Interface) சர்வீஸ் வேலை செய்யவில்லை; ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க முடியவில்லை; கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், கூகுள் பே, பி.ஓ.எஸ் (Point Of Sale) போன்ற எதன் மூலமும் பணத்தைக் கையாள இயலவில்லை; வங்கியிடம் இருந்து வழக்கமான `This service is not available now’ என்கிற பதில் வந்ததே தவிர வேறெந்தத் தகவலும் கிடைக்கவில்லை.


கொட்டித் தீர்த்த வாடிக்கையாளர்கள்...

டவுன் டிடெக்டர் (DownDetector) என்னும் வலைதளத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் கஷ்டங்களையும், குமுறல்களையும் கொட்டித் தீர்த்திருக்கின்றனர். முக்கியமாக, கிரெடிட் கார்டுக்கு பணம் கட்ட வேண்டிய கடைசித் தேதியில் இருந்த வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வரக்கூடிய அபராதம் மற்றும் வட்டியை எண்ணிப் பதறினர். 


ஒருவர் தன் கிரெடிட் கார்ட் பேலன்ஸை மொத்தமாகக் கட்ட பணம் இல்லாததால் மாதத் தவணையாக மாற்ற எண்ணி இருந்ததாகவும், அதுவும் முடியாத சூழ்நிலையில் மறுநாள் மொத்த பேலன்ஸையும் கட்டியாக வேண்டுமே, பணத்துக்கு எங்கு போவது என்றும் கலக்கமடைந்திருந்தார்.



மேலும், தங்கள் சிபில் ஸ்கோர் பாதிப்படைவதை எண்ணிப் பலரும் கலங்கி இருந்தனர். ஒருவர் தவறான அக்கவுன்ட்டில் பணம் செலுத்திவிட்டதாகவும், அதை உடனே சரிசெய்யாவிட்டால், பணம் பறிபோகும் வாய்ப்பு இருப்பதாகவும் கவலைபட்டிருந்தார்.



ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என்று சோஷியல் மீடியாக்கள் மூலமும் வங்கியை அணுக இயலாத கையறு நிலையில் ஒருவர், ``கோவிட் பாதிப்பால் ஹெச்.டி. எஃப்.சி வங்கி இறந்துவிட்டதா?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.



என்னாச்சு ஹெச்.டி.எஃப்.சி.க்கு?

என்னதான் ஆயிற்று, இந்த நம்பர் ஒன் தனியார் வங்கிக்கு?


இந்த வங்கி வழங்கி இருக்கும் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை சுமார் 1.5 கோடி. அக்டோபர் மாதத்தில் மட்டும் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் யு.பி.ஐ செயல்பாடுகளின் மதிப்பு 18,000 கோடி ரூபாய். ஆகவே, அதில் ஏற்படும் சிறு சிக்கலும் மக்களுக்குப் பெரும் தலைவலியை உருவாக்குகிறது. மேலும், என்ன விதமான பிரச்னை, எங்கே ஆரம்பம், நடந்தது தவறா, சதியா என்பது போன்ற தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.



எஸ்.பி.ஐ யோனாவிலும் சிக்கலா?

இதனால் ஏற்பட்ட பதற்றமும் பரபரப்பும் இரண்டு நாள்களில் தணிந்துவிட்டாலும், அதன் எதிரொலி இன்னும் தீரவில்லை. இதைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி புதிய கிரெடிட் கார்ட் வழங்குவதையும், புதிய டிஜிட்டல் செயல்பாடுகளை ஏற்படுத்துவதையும் தள்ளிப் போடுமாறு ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளது.



அடுத்ததாக, எஸ்.பி.ஐ-யின் யோனோ (Yono) ஆப்பிலும் சில குறைபாடுகள் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. இது உலகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் சந்திக்கக்கூடிய பிரச்னையே என்று ஃபோர்ப்ஸ் அட்வைசர் தெரிவிக்கிறது.



எப்படிச் சமாளிக்கலாம்?


வங்கிகளை மட்டும் குறை சொல்வதைத் தவிர்த்து, இதுபோன்ற சூழ்நிலையில் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள நாம் என்ன செய்யலாம் என்று தெரிந்துகொள்வது அவசியம்.


1. அக்கவுன்ட்டில் லாகின் செய்ய முடியவில்லையா? முதலில் பதறாதீர்கள். பிரச்னை உங்களுக்கு மட்டுமல்ல.


2. வங்கி ஏதாவது அறிவிப்பு செய்துள்ளதா என்று வலைதளங்களிலும், சோஷியல் மீடியாக்களிலும் தேடுங்கள்.


3. அறிவிப்பு ஏதும் இல்லாதபட்சத்தில், உங்கள் கம்ப்யூட்டர், மோடம், வைஃபை இவற்றின் இணைப்புகளைச் சரிபாருங்கள்; ரீஸ்டார்ட் செய்யுங்கள்.


4. மொபைல் பேங்கிங் என்றால், புதிதாக ஏதாவது அப்டேட் வந்துள்ளதா என்று கவனியுங்கள். அப்படி வந்திருக்கும்பட்சத்தில், அந்த அப்டேட்டை முதலில் இன்ஸ்டால் செய்தபின் மறுபடி லாகின் செய்து பாருங்கள். ஃபோனையும் ரீஸ்டார்ட் செய்யுங்கள்.


5. உடனடியாக ஏ.டி.எம் சென்று, பணத்தை எடுக்க முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள்.


பரிவர்த்தனைகளை சரிபாருங்கள்

6. பி.ஓ.எஸ் செயல்பாடு இயங்கும்பட்சத்தில், நமக்கு உதவக்கூடிய கடைக்காரரிடம் பொருள்கள் வாங்கி, பில்லைவிட அதிகப்படியான அளவு கார்டில் செலுத்தி மீதியைப் பணமாகப் பெற முடியுமா என்று பாருங்கள்.


7. யாருக்காவது பணம் செலுத்த வேண்டி இருந்தால், உடனடியாக அவருக்கு ஃபோன் செய்து பிரச்னையைக் கூறி, கால அவகாசம் பெறுங்கள். இதன் மூலம் அபராத்தையும் தவிர்க்க முடியும்.


8. இது போன்ற சமயங்களில் யாராவது ஃபோனிலோ, மெயிலிலோ தொடர்புகொண்டு உங்கள் தனிநபர் விபரங்களைக் கேட்டால் பதற்றத்தில் அவற்றைத் தருவதைத் தவிர்க்கவும்.


9. பிரச்னை தீர்ந்து, அக்கவுன்ட்டில் லாகின் செய்யும்போது நீங்கள் செய்யாத பரிவர்த்தனைகள் (Transactions) ஏதும் நிகழ்ந்திருக்கின்றனவா என்று கவனியுங்கள். அப்படி நிகழ்ந்திருக்கும்பட்சத்தில் உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு தெரிவியுங்கள். அடுத்த சில வாரங்களுக்கு அடிக்கடி லாகின் செய்து பரிவர்த்தனைகளை சரிபாருங்கள்.


10. வங்கியின் குளறுபடிகளால் உங்களுக்கு ஏதும் அதிகப்படியான அபராதம், நஷ்டம் மற்றும் செலவுகள் ஏற்பட்டிருக்கும்பட்சத்தில், அதை ஈடுசெய்யும்படி வங்கியிடம் கேட்கத் தயங்காதீர்கள்.



பொறுமையாகக் கையாளுங்கள்

இப்படிப்பட்ட அவசரத்துக்கென்றே இன்னொரு கிரெடிட் கார்டும், இன்னொரு பேங்க் அக்கவுன்ட்டும் வைத்து அவசரச் செலவுகளை சமாளிக்கலாம். எல்லாவற்றையும்விடச் சிறந்தது கிரெடிட் கார்ட் மற்றும் பில் பேமென்ட்டுகளை கடைசி நாள் வரை தள்ளிப் போடாதிருப்பது.


இது போன்ற சமயங்களில் வங்கி ஊழியர்களிடமும், கஸ்டமர் கேர் ஊழியர்களிடமும் பேச நேர்ந்தால், பொறுமையைக் கைகொள்ள வேண்டும். நமக்கு வங்கிக் கணக்குகளில் ஐந்து லட்சம் வரை அரசுக் காப்பீடு இருப்பதை நினைவுகொண்டாலே பதற்றம் நம்மை விட்டு விலகும்.


கம்ப்யூட்டர் செயல்பாடுகளையே அதிகம் சார்ந்திருக்கும் இன்றைய நிலையில் இது போன்ற தவறுகள் அவ்வப்போது நேரலாம். தயாராக இருக்க வேண்டியது நாம்தான்.


-: Thanks Vikatan :-


No comments:

Powered by Blogger.