விவசாய சங்கங்கள் அழைப்பு: டிசம்பர் 8 பாரத் பந்த்! - யாரெல்லாம் ஆதரவு... எவையெல்லாம் இயங்காது?

 மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றிய 3 வேளாண் மசோதாக்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதியிலுள்ள நெடுஞ்சாலைகளில் பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். `வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும், ஒரு அடி கூட பின்வாங்க மாட்டோம்’ என்று விவசாயிகள் உறுதியாக இருப்பதால், மத்திய அரசுக்குச் சிக்கல் அதிகரித்துள்ளது. நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கிப் படையெடுப்பதால், பாதுகாப்பு கருதி போலீஸாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் தொடர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் கடந்த 1-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி வரை விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே சுமூகமான தீர்வு கிடைக்காததால் 5 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, 6-ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் விவசாயக் குழுக்கள் சார்பில் நாளை (டிசம்பர் 8-ம் தேதி) நாடு தழுவிய முழு அடைப்புக்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.



பாரத் பந்த்-க்கு ஆதரவு தரும் அரசியல் கட்சிகள் :


தமிழகத்தில், தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள், `இந்த முழு அடைப்பில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பாதுகாக்க, தமிழகத்தில் இருந்து கிளம்பும் இந்த ஆதரவுக் குரல், அறவழியில் போராடும் விவசாயிகளுக்கு எழுச்சிக் குரலாக, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் துணை நிற்கும் குரலாக இருக்கட்டும். ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், அனைத்து எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், சமூகநல அமைப்புகள்,மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் அமோக ஆதரவளித்து, `பாரத் பந்த்’தை வெற்றி பெறச் செய்திட வேண்டும்’ என்று கூட்டறிக்கை வெளியிட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.



அகில இந்திய அளவில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட், புரட்சிகர சோஷலிஸ்ட், பார்வார்ட் பிளாக் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் பாரத் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துக் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகாலி தளம், ஆர்ஜேடி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.



புதுச்சேரி அரசியல் கட்சிகளின் ஆலோசனைக்குப் பிறகு இந்தியக் கம்யூனி்ட் கட்சி செயலாளர் சலீம் கூறுகையில், ``புதுவையிலும் முழு அடைப்புப் போராட்டம் வரும் 8-ம் தேதி நடத்த முடிவு எடுத்துள்ளோம். காங்கிரஸ், தி.மு.க, ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வரும் 8-ம் தேதி அன்று புதிய பேருந்து நிலையம், பாகூர், வில்லியனூர், மதகடிப்பட்டு, திருக்கனூர், காரைக்கால் ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடக்கும்" என்று தெரிவித்தார்.



தமிழகத்தில் சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, ஐ.என்.டி.யூ.சி, தொ.மு.ச உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்களும் நாளைய முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. இந்த 8 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொ.மு.ச பொதுச்செயலாளர் மு.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், ``விவசாயிகள் அறிவித்துள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. 



அதனை ஆதரித்து தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ், ஏ.ஐ.சி.சி.டி.யு, ஏ.ஐ.யு.டி.யு.சி., எம்.எல்.எப், டி.டி.எஸ்.எப், ஏ.ஏ.எல்.எல்.எப் ஆகிய சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்கும்’’ எனத் தெரிவித்திருக்கிறார். இதனால், தமிழகத்தில் ஆட்டோக்கள் அனைத்தும் நாளை ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பணிக்குச் செல்ல மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



புதுச்சேரியைப் பொறுத்தவரை ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.சி.சி.டி.யு, அரசு ஊழியர் சம்மேளனம், புதுச்சேரி மாநில ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்கள், பணியாளர்கள் அமைப்புகள், வணிகர் சங்கங்கள், வர்த்தக சபை, திரையரங்க உரிமையாளர்கள், பள்ளி, கல்லூரி நிறுவனங்கள், பேருந்து, லாரி, டெம்போ, லோடு கேரியர், ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கங்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், மீனவ சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் பந்த் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ராஜா திரையரங்கு சிக்னலில் மறியலில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இந்திய தேசிய வணிகர் சங்க காங்கிரஸ், அனைத்திந்திய வணிகர் சங்க காங்கிரஸ், ஹிந்த் மஸ்தூர் சபா, இந்திய வர்த்தக சங்கங்களின் மையம், அனைத்திந்திய ஒருங்கிணைந்த வணிகர் சங்க மையம், வணிகர் சங்க ஒருங்கிணைப்பு மையம், சுய தொழில் மகளிர் சங்கம், அனைத்திந்திய மத்திய வணிகர் சங்கம், தொழிலாளர் வளர்ச்சி கூட்டமைப்பு, ஒருங்கிணைந்த வணிகர் சங்க காங்கிரஸ் உள்ளிட்ட வணிக சங்கங்கள் நாளைய முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளன.


எவையெல்லாம் இயங்காது?


தொழிற் சங்கங்கள், வணிக சங்கங்களின் ஆதரவால் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்படும். ஆட்டோ, கார் தொடங்கி அனைத்து தனியார், வாடகை வண்டிகள் நாளை இயங்காது. அரசு தொழிற்சங்கங்களும் விவசாயிகளுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருவதால் நாளை தமிழகத்தில் பேருந்து சேவை பாதிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அரசு தரப்பில் பேருந்துகளை இயக்க முழுவீச்சில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மத்திய அரசும் ரயில் சேவைகளை வழக்கம்போல இயக்க திட்டமிட்டுள்ளது.


அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,``நாளை பகலில் அனைத்து ஆம்னி பஸ் சேவைகளும் நிறுத்தப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி சேவைகளும் நாளை பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.


நாளைய பாரத் பந்த் போராட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் பாரத் பந்த் போராட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை எனக் கேரளா விவசாயச் சங்கங்கள், வணிகர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.


நாளை அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, கடைகளை அடைக்கக் கட்டாயப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும், கொரோனா விதிகளை கடைபிடித்து முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Thanks Vikatan


No comments:

Powered by Blogger.