இந்த ஆப்பை டவுன்லோடு பண்ணாதீங்க... எஸ்பிஐ எச்சரிக்கை!
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது 40 கோடி வாடிக்கையாளர்களுக்கு இன்ஸ்டண்ட் லோன் ஆப் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்போதெல்லாம் இந்த வகை மொபைல் ஆப்கள் அதிகரித்துவிட்டன. இரண்டே நிமிடங்களில் கடன் தருவதாகக் கூறி தனிநபர் விவரங்கள் கேட்கப்படுகின்றன. இந்த ஆப்களில் அளவுக்கு அதிகமாக வட்டி வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இவை வங்கிகளுக்கு போட்டியாக இருந்தாலும் வங்கிகளை விட அளவுக்கு அதிகமாக வட்டி வசூலிப்பது வாடிக்கையாளர்களைச் சுரண்டுவதாகப் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஸ்டேட் பேங்க் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு எச்சரிக்கை செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் மொபைல் நம்பருக்கு லிங்க் அனுப்பப்பட்டு, இதை கிளிக் செய்தால் சில நிமிடங்களில் உடனடிக் கடன் கிடைக்கும் என்றெல்லாம் எஸ்எம்எஸ் வரும்.
இதில் வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதில் மோசடிகளும் அதிகமாக நடைபெறுகின்றன. இந்த மாதிரியான லிங்குகளை கிளிக் செய்தால் வங்கிக் கணக்கில் உள்ள பணம் காணாமல் போவதாகவும் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்த மாதிரியான எஸ்எம்எஸ்களில் காகித வேலை எதுவும் இல்லாமல், உடனடியாக 2 லட்சம் வரையில் கடன் கிடைக்கும் என்று கூறுவதால் வாடிக்கையாளர்கள் இந்த வலையில் விழுகின்றனர். நிதி நெருக்கடியில் இருக்கும் பலர் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் கடன் வாங்கி மாட்டிக்கொள்கின்றனர்.
கடன் வாங்கிய பிறகுதான் அளவுக்கு அதிகமாக வட்டி செலுத்த வேண்டியிருப்பதை உணர்கின்றனர் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கூறுகிறது. இதுபோன்ற வலையில் சிக்கி உயிரை விடும் நிலைக்கும் பலர் சென்றுள்ளனர்.
கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்த முடியாமல், வட்டிக்கு வட்டி என பெரும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். எனவே வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கும்படி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எச்சரிக்கை செய்துள்ளது.
No comments: